Monday, February 9, 2009

பெண்களே இது நியாயமா?

சீரழிவாய்ப் போய்விட்ட
சீதனம் செய்துவிட்ட
சிறுமையினைப் பாரென்று
சினந்திருக்கும் பெண்களுக்கு

சந்தோச வாழ்க்கைக்கு
சாபமாய்ப் போய்விட்ட
சவக்கிடங்கைப் பாரென்று
சலித்திருக்கும் பெண்களுக்கு

அடுக்காத செயலாலே
அழிந்தவர்கள் பெண்களென்று
ஆண்மகரைத் திட்டிநிற்கும்
அன்பான பெண்களுக்கு

தமிழரிடை பரவிவிட்ட
தறிகெட்ட வழக்கத்தால்
இனிமையான வாழ்க்கையினை
இழந்தவர்கள் நாங்களும்தான்

அநியாயச் சடங்காலே
ஆடவர்க்கு அழிவேது
அலட்சியமாய்க் கேட்போர்க்கு
அடியேன்நல் உதாரணமாம்

சீர்கெட்ட சீதனத்தால்
சிதைந்தவர்பெண் மட்டுமென்ற
சிந்தனையை உம்மிடத்தில்
சிதைத்துவிடும் எந்தன்கதை

தறிகெட்ட வழக்கத்தால்
தகர்ந்தவர்பெண் மட்டுமென்ற
தர்க்கத்தைத் தவிர்ப்பதற்காய்
தருகின்றேன் என்கதையை

இளமைப் பருவத்தின்
இனிய கனவுகளை
இதயத்தில் சுமந்தவனாய்
இசைபாடித் திரிந்தவன்நான்

எதிர்கால வாழ்வுபற்றி
எத்தனையோ எண்ணங்கள்
என்னவளைப் பற்றித்தான்
ஏராளம் கற்பனைகள்

பணக்காரி தேவையில்லை
பகட்டுகளும் தேவையில்லை
பல்கலை சென்றுபெற்ற
பட்டமும் தேவையில்லை

பதியாகப் பாவித்து
பணிந்திடவும் தேவையில்லை
எஜமானாய்ப் பாவித்து
எனக்குழைக்கத் தேவையில்லை

தலைவன்நீ என்றுசொல்லி
தவறிழைக்கும் போதெல்லாம்
தஞ்சாவூர் பொம்மையாகத்
தலையாட்டத் தேவையில்லை

தவறொன்று செய்துவிட்டால்
தட்டிக் கேட்கவெண்டும்
பிழையொன்று செய்துவிட்டால்
பிழையென்று சொல்லவெண்டும்

இன்பமோ துன்பமோ
இணையாகப் பகிர்ந்துகொள்ள
உற்றதுணை ஒன்றைத்தான்
உண்மையிலே தேடிநின்றேன்

என்துணையாய் வரப்போகும்
என்னவளைப் பற்றியெந்தன்
அடிமனதில் பதிந்திட்ட
ஆயிரமாம் கற்பனைகள்

தமிழர் குடும்பத்தில்
தலைமகனாய்ப் பிறந்ததனால்
ஆசைக் கனவெல்லாம்
ஆகாயக் கோட்டையாச்சு

கல்யாணச் சந்தையிலே
கழுத்தை மெல்லநீட்டுதற்காய்
அடுக்கடுக்காய் காத்திருந்த
அன்பான சோதரிகள்

அவர்தம் வாழ்க்கையினை
அழகாக அமைப்பதற்காய்
அடிமனதில் பதிந்திருந்த
ஆசைகளை எரித்துவிட்டேன்

சகோதர வாழ்க்கைக்காய்
சகலதையும் மறந்தேநான்
எட்டாத கொப்பொன்றை
எட்டிப் பிடித்துவிட்டேன்

வந்தவளைப் பற்றியும்நான்
வரைந்திடுவேன் நான்குவரி
வரைந்து முடிப்பதற்குள்
வந்துவிட்டால் பெருஞ்சமர்தான்

பலலட்சம் சொத்துள்ள
பணக்காரி என்மனைவி
வளமான குடும்பத்தின்
வாரீசாம் என்மனைவி

பணத்திற்கு மட்டுமல்ல
பகட்டிற்கும் குறைவில்லை
செல்வத்தில் மட்டமல்ல
செருக்கிற்கும் குறைவில்லை

அணிகலனில் மட்டுமல்ல
ஆணவத்தில் குறைவில்லை
தங்கத்தில் மட்டுமல்ல
தலைக்கனத்தில் குறைவில்லை

பணம்கொடுத்து வாங்கியதால்
பரிகாசம் செய்கின்றாள்
விலைகொடுத்து வாங்கியதால்
வீணனாகப் பார்க்கின்றாள்

கணவனென்னை மதிக்கவில்லை
கர்வத்தால் மிதிக்கின்றாள்
புருசனென்று பார்க்கவில்லை
புல்லென்று தூற்றுகின்றாள்

கைநீட்டி வாங்கியதால்
கைகட்டி நிற்கின்றேன்
பலலட்சம் வாங்கியதால்
பதிலின்றி நிற்கின்றேன்

விலைபோன காரணத்தால்
விதியைநொந்து நிற்கின்றேன்
தீனி போடமட்டும்
திறக்கின்றேன் என்வாயை

என்கதையைக் கேட்டதுமே
எதற்காக அழுகின்றீர்
என்னைப்போல் வாழ்விழந்தோர்
ஏராளம் இவ்வுலகில்

இச்சடங்கு இனிமேலும்
இருக்கவேண்டாம் இம்மண்ணில்
அடுத்தவர்நல் வாழ்க்கைக்காய்
அழித்திடுவோம் இந்நிலையை

தமிழ்மக்கள் மகிழ்ச்சியினை
தடுத்துநிற்கும் இவ்வழக்கை
ஒழித்துவிட வேண்டுமென்றால்
ஒன்றுபட்டு முயலவேண்டும்

ஆவேசம் கொண்டதனால்
அறிவிழந்து நிற்கின்றீர்
அமைதியாய்ச் சிந்தித்து
அணிதிரள வந்திடுவீர்

உங்கள் மகனுக்கு
உரியதுணை தேடுங்கள்
வியாபாரச் சந்தையிலே
விற்பனைக்கு வைக்காதீர்

அடுக்காத வழக்கத்தை
அழிப்பதற்காய் உம்முடனே
அணிதிரள எப்போதும்
ஆண்மக்கள் நாம்தயாரே.

No comments:

Post a Comment