Tuesday, February 3, 2009

பாரே பார்

பாரே உந்தன் இதயம் உள்ள
பக்கம் கையை வைத்துப் பார்
வீட்டை விதியை எண்ணித் தினமும்
விழிகள் கலங்கும் எம்மைப் பார்

தனியாய் வாழ்ந்த தமிழரைச் சிங்களத்
தலையினில் கட்டியே விட்டவர் நீர்
உரிமை இழந்த இனமாய் நாங்கள்
உலகம் முழுதும் உழல்வதைப் பார்

மழையில் பனியில் மாக்களைப் போல
மருளும் தமிழர் நிலையைப் பார்
மண்ணைப் பிடிக்கும் மனிதப் பேயாம்
மஹிந்த செயலை அடக்கப் பார்

ஆண்டாய் ஆண்டாய் வாழ்ந்த மண்ணை
அராஜகர் பறித்த கொடுமையைப் பார்
அகதிகளாய்த் தினம் இருப்பிடம் தேடி
அலைபவர் துயரைக் களையப் பார்

காமுகர் வெறியால் ஆவியை இழந்து
கிணற்றில் கிடக்கும் பெண்ணைப் பார்
கன்னியர் தங்கள் சுதந்திரம் தேடிக்
கருவியை எடுத்த காரணம் பார்

பால்மணம் மாறாப் பாலகன் கூடப்
புலியாய் மாறிய புதினம் பார்
பயங்கர வாதிகள் யாரெனக் கடிதில்
பகுத்து அறிந்து பதில்தரப் பார்

சிறுவரைப் படையில் சேர்ப்பது முறையோ
சீறியே நிற்கும் படித்தவர் நீர்
சிறுவரைப் படுக்கையில் கொல்வதும் முறையோ
சிந்தித் தெமக்கு விளக்கப் பார்

ஒட்டுப் படையுடன் ஒட்டும் அரசை
ஒட்ட நறுக்க முயன்றே பார்
சட்டம் ஒழுங்கை காக்க மறுத்த
மட்ட அரசை முடக்கப் பார்

மனிதம் என்றே பேசும் உங்கள்
மனதைக் கொஞ்சம் கேட்டே பார்
நீதி நியாயம் எல்லாம் இங்கே
நிலையாய் அழிந்து போனதைப் பார்

2 comments:

கவிக்கிழவன் said...

நன்றாக உள்ளது உங்கள் படைப்புக்கள். வித்தியாசமான சிந்தனை. சிறந்த படைப்புக்களில் உங்களது படைப்பும் ஒன்று. உங்களை மனமாற வாழ்த்துகின்றேன்........ இலங்கையிலிருந்து

Poorayam said...

கவிக்கிழவனே!
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

Post a Comment