Sunday, February 15, 2009

காதல் பாடம்

வேப்ப மரத்தின் கீழே போடப்பட்டிருந்த சாய்மணைக் கதிரையிலே சாய்ந்திருந்த றஜீவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். வளர்ப்பு நாய் அவனருகே வந்து தன் முன்னங் கால்களால் சுரண்டி அவனை விளையாட அழைத்தது. வழமை போல அதனுடன் சேர்ந்து விளையாடவோ அல்லது அதன் செயற்பாட்டை ரசிக்கும் மனநிலையிலோ றஜீவன் இல்லை என்பது அந்த ஐந்தறிவு ஜீவனுக்கு எப்படித் தெரியப் போகிறது.

தகப்பனார் காலையில் பேசிய விடயம் தொடர்பாக அவன் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது குழம்பிப் போயிருந்தான். மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகள் றஜீவனின் மனத்திரையில் தோன்றிக் கொண்டிருந்தது.

'தம்பி கொஞ்சம் இப்பிடி இரு ராசா. புறோக்கர் கந்தசாமி உனக்கு ஒரு சம்பந்தம் கொண்டு வந்திருக்கிறார். நல்ல வசதியான இடம், பிள்ளை கனடா சிற்றிசன் உள்ளதாம். உனக்கு விருப்பமெண்டா அங்கபோய் உன்ர படிப்பை தொடர வழி செய்து தருவினம். இங்கையும் நிறையக் காணி பூமி எல்லாம் இருக்குது. புறோக்கர் நாளைக்குப் பின்னேரம் வாறன் எண்டு சொன்னவர். அதுக்குள்ளை உன்ரை முடிவைச் சொன்னியெண்டால் பேச்சைத் தொடரலாம்.'

பெண்ணினுடைய படத்தை அவனிடம் கொடுத்து அந்தப் பேச்சை சுருக்கமாகவே முடித்திருந்தார். சாந்தினியுடனான இந்த மூன்று வருடக் காதல் இல்லாமல் இருந்திருந்தால் அவனுக்கு அங்கு யோசிப்பதற்கு எதுவுமே இருந்திருக்காது. ஆனால் சாந்தினி??

மூன்று வருடங்களுக்கு முன்னர் அவளை வகுப்பில் சந்தித்த அந்த நாட்களை இரை மீட்டிப் பார்க்கிறாள்.ஆரவாரமின்றி வகுப்புக்கு வந்து தானுண்டு தன் கற்றலுண்டு என்றிருக்கும் அவளின் அடக்கமும் பாடங்களில் காட்டும் தீவிர ஆர்வமும் தன்னிடம் ஒரு இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியதை றஜீவனால் உணர முடிந்தது.

கணித பாடத்தில் அவனுக்கிருந்த அசாத்தியத் திறமை காரணமாக தனக்கு ஏற்படும் சந்தேகங்களை சாந்தினி அவனிடம் கேட்டுத் தெரிந்துகொள்வாள். படிப்படியாக அவர்களுடைய அளவளாவல் பாடவிடயங்களுக்கு அப்பால், சினிமா, அரசியல், விளையாட்டு என்று வியாபித்துச் செல்லத் தொடங்கியது. இவற்றில் இருவருக்குமே இருந்த ஒத்த ரசனைத் தன்மை படிப்படியாக இவர்களுடைய நட்பை காதலாக மாற்றியது.

இவ்வாறாக மலர்ந்த காதல் இந்த மூன்று வருட காலத்தில் பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தான் தந்தையாரின் பேச்சு றஜீவன் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்திவிட்டிருந்தது.சாந்தினி தன்னை தன் உயிரினும் மேலாக நேசிக்கின்றாள் என்பதை றஜீவன் நன்கறிவான். ஆனால் அவளுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையானது. விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்த தந்தை விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதிலிருந்து அவளது குடும்பம் வறுமையில் வாடியது.தாயாரின் கடும் உழைப்பினால் தான் நான்கு பெண் பிள்ளைகளும் கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவளைத் திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் தன் உழைப்பிலேயே குடும்பத்தை நடாத்த வேண்டும் என்பதை றஜீவன் உணர்ந்திருந்தான். இது இயல்பாகவே சற்று ஆடம்பரப்பிரியனான றஜீவனின் மனதில் சிறு நெருடலை ஏற்படுத்தியிருந்ததும் உண்மையே.இந்த நிலையில் மீண்டும் மீண்டும் தந்தையின் வார்த்தைகளைச் சிந்தித்த அவனது மனம் பணத்தின் முன் காதலைத் தியாகம் செய்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தது. ஏழெட்டு வருடங்களாகக் காதலித்தவர்கள் கூட தங்கடை நல்வாழ்விற்காக இப்படியான முடிவுகளை எடுக்கிறார்கள் தானே என்று தன்னுடைய முடிவுக்கு நியாயமும் கற்பித்துக் கொண்டான். தங்களுடைய சுயநலமான முடிவுகளை நியாயங்களாக நினைத்துக் கொள்வதில் யாருக்கும் தடையில்லையே.

இந்த முடிவை இன்று எப்படியாவது சாந்தினியிடம் கூறிவிட வேண்டுமென மனதிற்குள் தீர்மானித்தாலும் அதனை அவளிடம் நேரடியாகக் கூற முடியாது குற்றமுள்ள மனது குறுகுறுத்தது. இறுதியில் தன்னுடைய முடிவைக் கடிதமாக எழுதிக் கொண்டு சாந்தினியைச் சந்திப்பதற்காக சைக்கிளில் புறப்பட்டான். மனத்திலிருந்த குற்றஉணர்வு அவனுடைய சைக்கிளின் வேகத்தை வெகுவாகக் குறைத்திருந்தது.

றஜீவன் சென்று கொண்டிருந்த பாதையில் சிறிது தூரத்தில் சிறு கூட்டமொன்று எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அங்கே நடப்பதை அறிய விரும்பியவனாக சைக்கிளை நிறுத்தி விட்டு மெதுவாக எட்டிப் பார்க்கிறான்.புறா ஒன்று மின்சாரம் தாக்கி இறந்துபோய்க் கிடக்கிறது. அருகே இருந்த அதன் ஜோடி தன் அலகுகளால் இறந்த புறாவின் இறக்கைளைக் கொத்திக் கொத்தி அவலக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தது. அதன் கண்களில் சோகம் அப்பியிருந்தது. நீண்ட நேரமாக இவ்வாறு அலறிக் கொண்டிருந்த காரணத்தால் அது மிகவும் இளைத்திருந்தது.

'காலையிலிருந்து இது இப்படித்தான் தீன் ஊண் இல்லாமல் கத்திக் கொண்டிருக்குது.'

என்று வேடிக்கையாளர்களில் ஒருவர் சொல்ல அருகே நின்ற வயதான ஒருவர்

'இந்த ஐந்தறிவு ஜீவன்களிடம் இருந்து நாங்கள் படிக்க வேண்டியது எவ்வளவோ
இருக்குது என்று பெருமூச்சுடன் சொன்னார்.

நடந்த சம்பவமும் பெரியவரின் வார்த்தைகளும் தனக்குச் சாட்டையால் அடிப்பதைப் போல றஜீவன் உணர்ந்தான்.தன்னுடைய துணையின் இழப்பைத் தாங்காது உணர்வின்றி உடல் சோர்ந்து கதறியழும் இந்த ஐந்தறிவு ஜீவனையும் உண்மையான காதலின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாது காதலிப்பது கட்டாயக் கடமை போலவும் காதலிக்காமை தரக்குறைவான விடயமாகவும் கருதி அதற்காகவே யாரையாவது காதலித்து பின்னர் வீட்டிலேற்படும் எதிர்ப்புகள் காரணமாகவோ அல்லது புரிந்துணர்வின்மை காரணமாகவோ அந்தக் காதலை சர்வ சாதாரணமாகவே முறித்து சிறிது காலத்திலேயே மற்றுமொரு பந்தத்தை ஏற்படுத்தி காதல் என்ற வார்த்தையையே கொச்சைப்படுத்தும் இந்த மானுட சமுதாயத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறான்.

அதிலும் தன்னை மானசீகமாக மூன்று ஆண்டுகளாக நேசித்தஇ நேசித்துக் கொண்டிருக்கிற ஒரு அப்பாவிப் பெண்ணை பணம் பகட்டுக்காக சில நிமிடங்களிலேயே மறக்கத் துணிந்துவிட்ட தன்னையும் அந்தப் புறாவையும் ஒப்பிட்ட போது அந்த ஐந்தறிவு ஜீவனை விடத் தான் எவ்வளவோ குறுகிவிட்டதை அவனால் உணரமுடிந்தது.

ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக சட்டைப் பையிலிருந்த கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்து எறிந்து விட்டு சைக்கிளைத் திருப்பிக் கொண்டு மீண்டும் வீட்டுக்குச் செல்லத் தயாராகிறான். தந்தையிடம் சொல்லவேண்டிய முடிவைப் பற்றி இப்பொழுது அவனிடம் ஒரு தெளிவு இருந்தது.

2 comments:

யூர்கன் க்ருகியர் said...

Very good story.

Poorayam said...

கருத்திற்கு நன்றி சகோதரா

Post a Comment