Saturday, February 21, 2009

வரும்... ஆனா வராது....

மீள் வருமா

புல்லுத் தரையில் விளையாடிப்
புண்ணாய்ப் போன கால்களுக்குப்
புளுதி தனையே மருந்தாக்கிப்
புரண்ட மகிழ்ச்சி மீள்வருமா

காலை உணவும் இல்லாமல்
காலிற் செருப்பும் இல்லாமல்
காச்சும் வெயிலில் விளையாடிக்
களித்த நாட்கள் மீள்வருமா

தோட்டம் துரவில் அலைந்தலைந்து
தொட்டாற் சுருங்கி மரம்தேடி
தொட்டுத் தொட்டு இலைசுருட்டி
தொலைத்த நாட்கள் மீள்வருமா

முறமது குடையாய் மாறிவிட
முற்றம் நிறைந்த மழைநீரில்
காகிதக் கப்பல் விட்டேநாம்
களித்த நாட்கள் மீள்வருமா

வீட்டுப் பாடம் செய்யாமல்
விளையாடிப் பின் காலையிலே
வியாதி எனவே பலசொல்லி
வீட்டில் நின்ற நாள்வருமா

காதல் என்ற சொல்லுக்குக்
கருத்தே தெரியா வயதினிலே
கடிதம் கொடுத்துப் பதிலுக்காய்
காத்த நாட்கள் மீள்வருமா

கண்ணைக் கவரும் கவர்ச்சியுடன்
கலகல வென்று சிரிக்கின்ற
கன்னிப் பெண்கள் பின்னாலே
காவல் சென்ற நாள்வருமா

கள்ள மில்லா மனங்கொண்ட
கனிவும் பண்பும் மிகக்கொண்ட
நண்ப ரோடு சேர்ந்திருந்த
நல்ல நாட்கள் மீள்வருமா

வெய்யில் மிகுந்த நேரத்தில்
வேப்ப மரத்து நிழல்தன்னில்
சாய்வுக் கதிரை துணையுடனே
சயனித்த நாட்கள் மீள்வருமா

தொல்லை இல்லா நண்பருடன்
தொடராய் ஓடும் வண்டியிலே
தொங்கிக் கொண்டே பயணித்துத்
தொலைத்த நாட்கள் மீள்வருமா

அறியாமல் நான் செய்துவிட்ட
அத்தனை தவறும் களைந்தகற்றி
அழகாய் மீள வாழ்க்கையினை
அமைத்து வாழும் நாள்வருமா

No comments:

Post a Comment