Thursday, February 5, 2009

அபிசேகம்

நரகத்திலிருந்து விடுதலை கிடைத்து விட்டது. யமனுடைய கோட்டை வாயில் வரை சென்று மீண்டு வந்தாயிற்று. இது சாத்தியமா? நடக்கக் கூடியது தானா? நான் காண்பது கனவா? என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டதில் இது நனவு தான் என்று தெரிகிறது.

இனிமேல் தினம் தினம் தூக்கமற்ற நீண்ட இரவுகளாய் அம்மாவை நினைத்து கண்கலங்கி, இராப்பொழுதுகளைக் கழிக்கத் தேவையில்லை. சாப்பிடுவதற்கு வைத்திருக்கும் ஒரேயொரு தகரப் பாத்திரத்தையே இரவில் சிறுநீர் கழிக்கும் பாத்திரமாகப் பாவிக்கும் கொடுமை இனியில்லை. இன்றைக்கு யார் வருவார் எப்படியான சித்திரவதைகளைச் செய்யப் போகிறார்கள் என்ற ஏக்கம் இனியில்லை.

நாட்டைக் காக்கப் புறப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் சிங்கள அரசின் கைப்பிள்ளைகளாக மாறி தமிழர்களைக் கடத்திச் சென்று பணம் பறித்துச் சிங்கள அமைச்சர்களிடம் ஒப்படைக்கும் கொடுமையைப் பத்திரிகையிலும் வானொலியிலுமே கேட்டுக் கொண்டிருந்த எனக்கும் அந்த அனுபவம் விரையில் கிடைக்கப் போகிறது என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்த நரக வேதனையை கடந்த ஆறு மாதங்களாக அனுபவித்தாயிற்று. இருந்த சொத்துக்களை எல்லாம் விற்று மற்றவரிடம் கடன் வாங்கியும் அவர்கள் கேட்ட தொகையைக் எனது மாமா கொடுத்த பின்பு தான் அந்தச் சகதியினுள் இருந்து மீண்டு வந்தேன்.

ஆனால் இந்தப் பணக் கொடுக்கல் வாங்கல்கள் எதையும் அறிந்திராத அம்மாவிற்கோ இது சந்திப் பிள்ளையாரின் திருவிளையாடல் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. அதிலும் தான் கடவுளுக்குத் தருவதாக வேண்டிக் கொண்ட ‘லஞ்சம்’ தான் என்னைக் காப்பாற்றிக் கொண்டு வந்து சேர்த்து விட்டதாய் ஒரு எண்ணம். அம்மா பம்பரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர் முகத்தில் பூரிப்பின் உச்சக் கட்ட உற்சாகம். இந்த ஆறு மாதங்களாக அவர் எவ்வளவு துன்பப்பட்டிருப்பார். பெற்ற பிள்ளை உயிருடன் இருக்கிறானா இல்லையா என்றறியாது எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார். அவை எல்லாவற்றற்குமாகச் சேர்த்து வட்டியும் முதலுமாகச் சந்தோசப்படுகிறார். எனது அம்மாவிற்குக் கிடைத்த அதிஸ்டம் கிடைக்காது எத்தனை தாய்மார்கள் தினம் தினம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்?

ஒப்புக் கொண்ட ‘லஞ்சங்களை’ ஒவ்வொன்றாய்க் கொடுக்கும் பணி ஆரம்பமாகி விட்டது. அதன் முதற் கட்டமாக இன்று சந்திப் பிள்ளையாருக்கு அபிசேகம் நடக்கப் போகிறது. ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பால், தயிர், தேன், இளநீர் என்பன வாங்கி அடுக்கியாயிற்று. பூமாலைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதன் ஒரு கட்டமாக என்னையும் பட்டினி போட்டு விட்டார்கள். ‘வெளியே’ கொண்டு வந்ததற்கு நன்றிக் கடனாக நானும் விரதம் இருக்க வேண்டுமாம். அம்மாவைச் சீண்டிப் பார்ப்பதற்காக மெல்ல வாயைத் திறந்தேன்.

“அந்த அறுவாங்;கள் தான் ஆறு மாசமா பட்டினி போட்டிட்டாங்கள் எண்டால் இண்டைக்குப் பிள்ளையாரும் என்னைப் பட்டினி போட்டிட்டார்.

அம்மா பதறிப் போய் விட்டார்.

“டேய்! என்ன கதை கதைக்கிறாய்? இப்படி கதைச்சுக் கொண்டு திரிஞ்சதுக்குத் தானே கடவுள் உன்னை உள்ளுக்கை அனுப்பி எடுத்தவர். இன்னும் திருந்திற பாடாய் காணயில்லை.”

பிள்ளையாரா என்னைப் பிடித்து உள்ளுக்குப் போட்டார? கடவுளின் முகத்திலே எப்போதும் கனிவு பொங்குமாமே? வந்தவர்களின் முகத்திலே கனிவை மருந்துக்கும் காணவில்லையே? கொலை வெறியல்லவா தெரிந்தது.இத்தனை கொடுமைகளையும் அனுபவிப்பதற்கு நான் செய்த குற்றம் தான் என்ன? ஈழத்து மண்ணிலே தமிழனாகப் பிறந்தது குற்றமா? இந்த நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டுமானால் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று ‘அவர்கள்’ கூப்பிட்ட போது போகாமல் தலைநகரில் வாழ வந்தது குற்றமா? வந்த இடத்தில் எனது முயற்சியால் வியாபாரத்தைத் தொடங்கி பணம் சேர்த்தது குற்றமா? எனக்கு இன்னும் எதுவுமே புரியவில்லை.

என் மனதில் எழுந்த கேள்விகளை வெளியே கொட்டி அம்மாவை ஏன் கவலைப்படுத்துவானேன் என நினைத்து மௌனமாகி விட்டேன். அப்போது தான் வெளியே அந்தக் குரல் கேட்டது.

“அம்மா தர்மம் போடுங்கம்மா”

எட்டிப் பார்க்கிறேன். ஒரு நடுத்தர வயதுப் பெண். நாற்பது வயதிருக்கலாம். வறுமை இன்னுமொரு பத்தைக் கூட்டிக் காட்டியது. வாழ்க்கைச் சக்கரத்தின் இடையில் அகப்பட்டு நன்றாகச் சிதைந்து போயிருந்தாள். முகத்திலே ஏழ்மையின் கோடுகள். கவலை தோய்ந்த அந்த முகம் ஆயிரம் கதை பேசின. பக்கத்திலே ஒரு சிறுவன் ஐந்து வயதிருக்கலாம். அவளுடைய மகன் என்பதை முகம் அப்படியே படம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. தாயின் சோகத்தை பங்கு போட்டுக் கொள்ளும் அளவிற்கு இன்னும் பக்குவமடையவிலலை. சிணுங்கிக் கொண்டே தாயன் சேலைத் தலைப்பைப் பிடித்திழுக்கிறான்.

“ எங்கை இருந்தம்மா வாறியள். இந்தப் பிள்ளையின்ரை தகப்பன் எங்கை”

மெள்ள கேள்விக் கணைகளை வீசுகின்றேன்.

“அதை ஏன் தம்பி கேக்கிறீங்கள். அந்த ராசா இருந்தால் என்னை இப்படிக் கஸ்டப்பட விட்டிருப்பாரே? அந்த மனுன் என்னையும் பிள்ளையையும் எப்படி வைச்சிருந்தவர். பாழ்படுவான்கள் எல்லாத்தையும் நாசமாக்கிப் போட்டான்கள். கடற் தொழிலுக்குப் போனவரை நாயைச் சுடுற மாதிரிச் சுட்டு இழுத்துக் கொண்டு போனவங்கள். அந்த மகாராசன்ரை உடம்பைக் கூடப் பாக்கத் தர இல்லை”

குரல தழுதழுத்தாலும் வார்த்தைகள் கோர்வையாக வருகின்றன. அவள் அந்தச் சம்பவத்தைப் பல முறை பலரிடம் ஒப்புவித்திருக்கிறாள் என்பது அவள் கதை சொன்ன பாங்கிலிருந்து தெரிகிறது.

துயரங்கள் அடுத்தவரோடு பகிரப்படும்போது ஒரு ஆறுதல் கிடைக்கத்தான் செய்கிறது அல்லவா? இந்த யுத்தம் யாரைத் தான் விட்டது? எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.. பாதிப்பின் அளவு தான் வித்தியாசப்படுகிறது. சிலருக்கு காலிலே ஏற்பட்ட சிறு சிராய்ப்புப் போலத் தோற்றாததாக…. இன்னுஞ் சிலருக்கு காலை இழந்தது போலப் பலமானதாக…. இன்னுஞ் சிலருக்குத் தலையே போனது போல மீள முடியாமல்…. எத்தனை துயரங்கள்? எத்தனை அழிவுகள்? ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஒவ்வொரு மாதிரியான சோகக் கதைகள்.

இதற்குள் அம்மாவிற்கு சத்தம் கேட்டு விட்டது. பத்து ரூபா காசைக் கொண்டு வந்து அவளிடம் கொடுக்கிறாள். வழமையாக இரண்டு ரூபாய் தானம் செய்யும் அம்மா எனது விடுதலையைக் கொண்டாடும் விதமாக ரேட்டைப் பத்து ரூபாவாக உயர்த்தியிருப்பது போலத் தெரிகிறது.

“அம்மா நீங்கள் நல்லா இருக்கோணும். சாப்பிடுறதுக்கு ஏதாவது இருந்தால் தாங்கம்மா…நானாவது பசியைத் தாங்கிக் கொள்ளுவன். இந்தப் பச்சை பிள்ளை பாவம். பசியிலை கத்துறான்.

“ நாங்கள் இண்டைக்கு விரதம் எண்ட படியால் ஒண்டும் சமைக்க இல்லை. போயிட்டு இன்னொரு நாளைக்கு வாங்கோ.”

பெண்ணின் முகத்திலே ஏமாற்றம். திரும்பி நடக்கிறாள். பையன் கத்திக் கொண்டே பின்னால் ஓடுகிறான்.அபிசேகத்திற்கு வாங்கி வைத்திருக்கும் பாலின் ஞாபகம் மனதில் எழ மெல்ல அம்மாவின் காதைக் கடிக்கிறேன்.

“அம்மா அபிசேகத்திற்கு வாங்கின பால் இருக்குதெல்லே. அதைக் குடுப்பமே”

நான் முடிக்கவில்லை. அம்மா பதறிப் போய் விட்டார்.

“விசர்க் கதை கதைக்கிறாய். அது சுவாமிக்கு வாங்கி வைச்சதெல்லே. அதைக் குடுக்கிறது சுவாமி குற்றம் ஆகிவிடும்…”

“ஏனம்மா சுவாமிக் கெண்டு வைச்ச பாலை அந்த ஏழைக்குக் குடுத்தால் சுவாமி குற்றமே”

“நீ உந்த வேதாந்தக் கதைகளை விட்டுப் போட்டு வேலையைப் பார் பாப்பம்”

அம்மா அந்தக் காலத்து மனிசி.அவவுக்கு விளங்கப்படுத்த முடியாது. நான் மௌனியாகி விடுகிறேன். என்ன தான் வாயை மூடி மௌனியாகி விட்டாலும் என் மனதிற்குள் ஆயிரம் எண்ண ஓட்டங்கள். ஆயிரம் கேள்விகள். கடவுள் அன்பின் வடிவமானவர். சகல ஜீவராசிகளையும் படைத்துக் காத்து வருகிறார். உயிர்கள் படும் துன்பங்களை நீக்குவதற்காக அடிக்கடி அவதாரங்களை எடுக்கிறார். என்றெல்லாம் படித்தோமே.தாயை இழந்த பன்றிக் குட்டிகளின் பசியைப் போக்குவதற்காக பன்றி உரு எடுத்து வந்தாராமே? அத்தகைய கடவுள் தனது அபிசேகத்திற்குரிய பாலின் மூலம் அந்த ஏழைச் சிறுவனின் பசி நீக்கப்பட்டிருந்தால் சந்தோசப்பட்டிருக்க மாட்டாரா?பெரும் பணச் செலவில் நடாத்தப்படும் அபிசேகங்களையும் திருவிழாக்களையும் கடவுள் உண்மையில் விரும்புகிறாரா? அலலது இவையெல்லாம் நடுவில் வந்தவர்களின் இடைச் செருகல்களா?

சிந்தனை வயப்பட்டிருந்த என்னை குசினிக்குள் இருந்து கேட்ட ‘டமால்’ என்ற சத்தம் நிஜவுலகிற்குள் கொண்டு வருகிறது. அபிசேகத்திற்காக வைக்கப்பட்டிருந்த பால் போத்தல் விழுந்து போய் உடைந்து கிடக்கிறது. தனது கைவரிசையைக் காட்டி விட்ட பெருச்சாளி பயந்துடன் கூரைக்குள் ஏறி மறைகிறது.அம்மாவும் ஓடி வந்து எட்டிப் பார்க்கிறார்.

“பிள்ளைக்குக் குடுக்காத பால் எனக்கும் வேண்டாம் எண்டு பிள்ளையார் சொல்லிப் போட்டார் போலை’’

வழமை போலவே அம்மாவைச் சீண்டுகிறேன்.ஆனால் அம்மா என்மீது கோபிக்கவில்லை. மாறாக மௌனம் காக்கிறார். எனது சந்தேகங்கள் சிலவற்றுக்கு விடை கிடைத்ததை போல உணர்கிறேன். அம்மாவின் முகத்திலும் தெளிவு தெரிகிறது.

No comments:

Post a Comment