Thursday, February 19, 2009

எந்தன்குரல் கேட்கிறதா?

அவனியிலே வித்தகனாய்
அறிவுடனே நான்வாழ
அனுதினமும் கனவுகண்ட
அன்பான அம்மாக்கு

என்னருகே இருக்கையிலே
உன்னருமை தெரியவில்லை
அருமையினை உணர்கையிலே
அருகினிலே நீயில்லை

மெழுகாய் உனைஉருக்கி
மெருகூட்டி நின்றவளே
வெளிச்சத்தின் அருமையினை
இருட்டில்தான் உணர்கின்றேன்

உன்பேனா பிரசவித்த
உரைகளைநான் மேடையேற்றி
பேச்சாளன் ஆகியதை
பெருமையுடன் நினைக்கின்றேன்

பரீட்சைக்கு முதல்நாளும்
படுக்கையிலே விழுந்திடுவேன்
என்னருகே வந்திருந்து
எனக்காக நீபடித்தாய்

என்பாடம் தனைப்படித்து
எனைஉயர்த்த முயன்றவளே
உன்பாசம்தனை எந்த
உலகத்தில் காண்பேனோ

சிந்தையிலே எந்நாளும்
எந்தனையே தாங்கியதால்
உந்தனுக்கு எப்போதும்
நிம்மதியே இருந்ததில்லை

உனக்காக எதையும்நீ
என்னிடத்தில் கேட்டதில்லை
எனக்காக எதையும்நீ
செய்யாமல் விட்டதில்லை

சேவைசெய்தோம் என்கின்ற
செருக்கொடு இருப்போரே
சேயெனக்குத் தாய்செய்த
செயலுக்கு இணைவருமோ

கடைமையினைச் செய்துவிட்ட
களிப்போடு சென்றுவிட்டாய்
கைம்மாறு செய்யாமல்
கலங்குகின்றேன் தனியாக

கடனாளி இல்லாமல்
கடைசிவரை வாழுமெந்தன்
கனவினைநீ கலைத்துவிட்டு
கண்மூடிப் போனாயே


உன்னிடத்தில் பட்டகடன்
அடைப்பதற்கு வழியின்றி
அரைவழியில் விட்டுவிட்டு
அவ்வுலகம் போனாயே

வியர்வையினை நீராக்கி
விளைவித்த பயிரெங்கள்
விளைச்சலினைக் காணாமல்
விட்டுவிட்டுப் போனாயே

அடுத்துஒரு பிறப்பிருந்தால்
அம்மாஉன் பிள்ளையாகப்
பிறக்கின்ற வரமெனக்குப்
பிச்சையாகவும் வேண்டாம்

மாறாக நீயெனக்கு
மகனாக வரவேண்டும்
நான்செய்த தவறெல்லாம்
நீசெய்ய அழவேண்டும்

எமனுன்னைப் பிரித்தெடுத்து
எங்கேதான் வைத்தாலும்
என்மீது ஒருகண்ணை
எப்போதும் வைத்திருப்பாய்

உதிரத்தை எரித்துநீயும்
உழைத்திட்ட உழைப்பெந்தன்
உள்ளத்தில் இருக்கும்வரை
உன்நினைவோ டிருந்திடுவேன்

No comments:

Post a Comment