Saturday, July 4, 2009

கனவான்களே! உங்களிடம் சில கேள்விகள்

பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் தலைவிதி சிங்கள ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பிலிருந்தான கடந்த 60 ஆண்டு காலப் பகுதியில் தமிழினம் அனுபவித்த கொடுமைகள் சொல்லிலடங்கா.

இந்தக் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தமிழனத்தின் உரிமைப் போருக்கு ஹபயங்கரவாத' முலாமிட்டு அந்த உரிமைப் போரை நசுக்குவதற்கு உலகமே திரண்டு முயன்று அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டு விட்டன.

தமது மண்ணிலே சுதந்திரமாக, ஜனநாயக உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக, வார்த்தைகளில் விபரிக்க முடியாத அர்ப்பணிப்புகளுடன் போராடிய தமிழினத்தை இன்றைக்கு முட்கம்பி வேலிகளுக்கும் அடைத்துப் பார்த்துத் திருப்திப்படுகின்ற சர்வதேசக் கனவான்களே!
ஈழத் தமிழ் மக்களின் மனதிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் ஆயிரம் ஆயிரம் கேம்விகளுக்கு என்ன பதில் தரப் போகின்றீர்கள்? அல்லது என்ன பதிலைத் தான் வைத்திருக்கிறீர்கள்?

1. சிறுவரைப் படையில் சேர்ப்பது முறையோ, அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது, அவர்களது மனநிலை பாதிக்கப்படுகிறது என்றெல்லாம் கூச்சலிட்ட ஐநா பிரதிநிதிகளே! யுனிசெப் கனவான்களே!

இன்றைக்கு ஆயிரக்கணக்கான சிறுவர்கள் அவர்களது பெற்றோரிடமிருந்து பலவந்தமாகப் பிரிக்கப்பட்டு, அடைக்கப்பட்டு, கல்வி நடவடிக்கைகள் முடக்கப்பட்டு இருக்கிறார்களே. இதற்கெதிராக ஒரு காகிதத் தலைப்பில் கண்டனம் தெரிவிக்கக் கூட துப்பில்லாமல் போய் விட்டீர்களே? இனியும் உங்களுக்கு சிறுவர் அமைப்புகள் எதற்கு? சிறுவர் நலச் சட்டங்கள் எதற்கு?

2. ஈரான் தேர்தலிலே வாக்கு மோசடி இடம்பெற்று விட்டது என்று எதிர்க்கட்சிக்காரர்கள் கொடி பிடித்ததுமே ( எந்த ஆசிய நாட்டில் தான் நேர்மையாகத் தேர்தல் நடந்துள்ளது? அல்லது தேர்தல் நேர்மையானது என்று எதிர்க்கட்சிகள்; எப்போது ஒத்துக் கொண்டுள்ளன?) அந்த மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன என்ற ஹகவலை'யில் நித்திரையைத் தொலைத்து விட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அவருக்கு ஹஆமாம்' போடும் ஏனைய அரசுத் தலைவர்களும் கண்டனம் மேல் கண்டனமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஐயாமாரே! உங்களுக்கு 3 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு, மந்தைகளைப் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற செய்தி இன்னும் எட்டவில்லையா?

3. ஆபத்தான சூழலில் பணிபுரிந்த ஊடகங்களுக்கும் வைத்தியர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் விருதுகளை அள்ளிக் கொடுப்பதற்கும் வாழ்த்து மழைகளைப் பொழிவதற்கும் காத்திருக்கும் சர்வதேச நிறுவனங்களே!

குண்டு மழைகளுக்கு மத்தியிலே, செல் வீச்சுக்களுக்கு இடையிலே உயிராபத்தை எதிர் கொண்டவாறே தினம் தினம் காயப்பட்ட ஆயிரக் கணக்கான மக்களுக்கு இரவு பகல் பாராது பணியாற்றிய ஹகுற்றத்தை'ச் செய்த வைத்தியர்களுக்கு புலிச்சாயம் பூசி அவர்களைச் சிறையிலடைக்க சிங்களப் பயங்கரவாத அரசு முயற்சி செய்கிறதே. இதற்கெதிராக மூச்சுக் கூட விட மாட்டீர்களா?

4. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க தனிக் குழுவை அமைக்கப் போவதாக அறிவித்துள்ள அமெரிக்க அரசாங்கமே!

ஒரு உயிருக்காகக் குழு அமைக்கின்ற நீங்கள் ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்ட 25,000 இற்கும் மேற்பட்ட எம் தமிழ் உறவுகளுக்காய் என்ன செய்யப் போகின்றீர்கள்?

5. ஈரானின் பிரித்தானியத் தூதரகத்தில் பணிபுரிந்த உள்;ளுர் வாசி ஒருவரைக் கைது செய்ததன் மூலம் பிரித்தானியாவை ஈரான் அவமதித்து விட்டது என்று கூப்பாடு போடும் பிரித்தானிய அரசே!

உங்களது வெளிநாட்டமைச்சர் உள்ளிட்டோர் கொழும்பில் வைத்து அவமானப் படுத்தப்பட்டதற்கு என்ன செய்து கிழித்து விட்டீர்கள்?

6. புலிகளே சரணடையுங்கள், புலிகளே சரணடையுங்கள் என்று தினம் தினம் அறிக்கை விட்டீர்களே. (பராக் ஒபாமா நேரடியாக வெள்ளை மாளிகை வாசலிலிருந்து இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்) உங்கம் கோரிக்கைக்கேற்ப ஐநாவிற்கும் அறிவித்து விட்டு வெள்ளைக் கொடியேந்திச் சென்ற அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் உள்ளிட்டோரை ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்ற சிங்கள அரசின் நடவடிக்கைக்கு ஒரு கண்டன அறிக்கையாவது வெளியிட உங்களுக்குத் துப்பில்லாமல் போய் விட்டதா? அல்லது இந்த நடவடிக்கையை நீங்களும் ஆமோதிக்கிறீர்களா?

7.பாதுகாப்பான பிரதேசத்திற்குச் செல்லுங்கள், பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள் என்று வன்னி மக்களை கேட்டுக் கொண்ட ஐ.நா செயலாளரே!
ஏனைய கோமான்களே!

தமது விருப்பத்துக்கு மாறாகப் பிரித்து அடைத்து வைக்கப்பட்டுள்ள தம் நெருங்கிய உறவுகளைப் பார்ப்பதற்காக முட்கம்பி வேலி தாண்டியதற்காக அவர்களைச் சுட்டுக் கொன்று போட்டதே சிங்களப் படைகள். இது தான் நீங்கம் சொன்ன பாதுகாப்பான பிரதேசமா?

8. யுத்தக் கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற கரிசனையில் பெரும் சாசனங்களை எழுதிப் புத்தகங்களில் வைத்திருக்கின்ற பெரியவர்களே!

இன்றைக்குச் சரணடைந்து சிங்களப் படையின் பாதுகாப்பில் இருக்கின்ற போராளிகள் தினமும் காணாமல் போகிறார்களே! இவர்கள் விடயத்தில் யுத்தக் கைதிகள் தொடர்பான சாசனம் எதுவுமே செய்யாதா? அந்தச் சாசனமும் தனக்குப் பிடித்தமான நாடுகளில் மட்டுமே செயல்படுமா?

இறுதியாக ஒரு வார்த்தை.

சிங்கள தேசத்தின் அத்தனை மனித உரிமை மீறல்களையும் இன அழிப்பையும் மானிட விரோத செயல்களையும் கைகட்டி வாய்பொத்தி நின்று வேடிக்கை பார்க்கும் நீங்கள் ஒரு விடயத்தை மட்டும் மறந்து விடாதீர்கள்.

வருங்காலத்தில் எங்கோ ஒரு தேசத்தில் முளைக்கும் பயங்கரவாத இயக்கம் ஒன்று ( உங்கள் வரைவிலக்கணப்படியான பயங்கரவாதஇயக்கமல்ல. உண்மையிலேயே பயங்கரவாதச் செயல்களைச் செய்கின்ற பயங்கரவாத இயக்கம்) சிங்கள அரசு செய்தது போன்ற மிலேச்சத்தனமான செயலைச் செய்கின்ற போது அதைக் கண்டிப்பதற்கான அருகதை உங்களுக்கு இல்லாது போய் விடும். அப்படிக் கண்டித்தாலும் அது வலுவிழந்து போய்விடும்.(ஒரு பேப்பருக்காக எழுதப்பட்ட கட்டுரை)